புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெறவுள்ள தெருவோர உணவுத் திருவிழா, கடற்கரை காந்தி திடலில் துவங்கியுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விதவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் சுய உதவி குழுக்கள் மூலம், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான புட்டு, கொழுக்கட்டை, இடியாப்பம், சுண்டல், குழிப்பணியாரம் போன்றவை தயாரிக்கப்பட்டு, நகர மற்றும் கிராமப்புறங்களின் முக்கிய இடங்களில் விற்கப்படுகின்றன.இந்நிலையில், சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், தமிழர்களின் உணவு வகைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிரபலப்படுத்தும் வகையிலும், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் 3 நாட்கள் நடைபெறும் தெருவோர உணவுத் திருவிழா துவங்கியுள்ளது.
நகராட்சி சார்பில் நடைபெறும் இந்த திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.இதில் கரும்பு ஜூஸ், வெண்ணப்புட்டு, பால் கொழுக்கட்டை, பஜ்ஜி வகைகள், கம்பு, கேழ்வரகால் செய்யப்பட்ட பாரம்பரிய தின்பண்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இவற்றை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் விரும்பி சுவைத்து மகிழ்ந்தனர்.