குழந்தைகள், வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச் சத்துத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கியமைக்காக மூன்று பிரிவுகளில், தமிழக அரசிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்குவதற்காக போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாமல் குழந்தைகள் பிறக்கவும், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு, தமிழக அரசிற்கு ஒருங்கிணைப்பு மற்றும் சமுதாய நிகழ்ச்சிக்கு அனைவரையும் திரட்டுவதில் முதலிடமும், திட்டத்தைச் செயல்படுத்துதலில் சிறந்து விளங்கியமைக்காக முதலிடமும், ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளில் இரண்டாமிடமும் கிடைத்துள்ளது. இதற்காகத் தமிழக அரசிற்கு விருதுகளும், ஊக்கத் தொகையாக மூன்று கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா மற்றும் அரசு அதிகாரிகள் விருதைப் பெற்றுக்கொண்டனர்.