சென்னை மாதவரத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சைபுல்லாஹ் மற்றும் அருண்.
இவர்கள் இருவரும் கடந்த 7-ம் தேதி மாதவரம் ரவுண்டானா சந்திப்பு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மாதவரம் பொன்னியம்மன் மேடு தெருவைச் சேர்ந்த பப்பி விஜய், கார்த்திகேயன், ராஜி என்ற விஜய் ஆகிய மூவரும், சைபுல்லாஹ் மற்றும் அருண் ஆகியோரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது திடீரென மறைத்துவைத்திருந்த கத்தியை காட்டி சைபுல்லாஹ்வையும், அருணையும் மிரட்டிய அவர்கள், இருசக்கர வாகனத்தை பறித்துவிட்டு தப்பினர்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீஸார், விசாரணை நடத்தினர்.
கடந்த 24-ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மாதவரம் சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத் திருடர்கள், போலீஸாரைக் கண்டவுடன் வாகனத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்த தப்பிச்செல்ல முயன்றனர்.
சினிமா பாணியில் விரட்டிச் சென்ற போலீஸார், அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் வாகன திருடர்கள் என்பதும், மாதவரம் மற்றும் புழல் பகுதிகளில் வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.