2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய வெற்றி

இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் மதிப்பிலான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளன.

மொத்தம், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜப்பான், கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், ஃபின்லாந்து, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சி.பி.சி.எல். நிறுவனம், நாகப்பட்டினத்தில் புதிதாக பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக 27 ஆயிரத்துக்கு 400 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

சென்னை அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, விரிவாக்க பணிக்காக ஹுண்டாய் நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம், ப்ரீமியம் வகை ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்காக 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள தனது தொழிற்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயை எம்.ஆர். எஃப் முதலீடு செய்யவுள்ளது.

புகழ்பெற்ற பியூஜியோட் வகை கார்களை திருவள்ளூர் மாவட்டத்தில் தயாரிப்பதற்காக பிரான்ஸைச் சேர்ந்த PSA நிறுவனம் ஆயிரத்து 250 கோடி ரூபாயை முதலீட்டு செய்யவுள்ளது. எய்ச்செர் மோட்டர் நிறுவனம், விரிவாக்கப் பணிகளுக்காக ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீட்டு செய்யவுள்ளது. என்.எல்.சி. நிறுவனம் 23 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 32 ஆயிரத்து 206 கோடி ரூபாய்க்கு முதலீட்டு செய்ய முன் வந்துள்ளது.

எம்.ஆர்.எஃப் நிறுவனம் மூவாயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. சாய் பல்கலைக்கழகம், 580 கோடி ரூபாய் முதலீட்டு செய்யவுள்ளது, அலையன்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 488 கோடி ரூபாயை முதலீடு செய்ய முன் வந்துள்ளது. ஏசர் நிறுவனம் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய உள்ளது.

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவித்தார்.

Exit mobile version