2வது உலகக்கோப்பையில் மீண்டும் அசத்திய மேற்கிந்திய தீவுகள் அணி

12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை பார்த்து வருகிறோம். 

இரண்டாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1979-ம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே அரங்கேறியது. முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்றன.

60 ஓவர்கள் போட்டி, வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்து மற்றும் ஆட்ட அட்டவணை முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அணிகளில் மட்டும் ஒரே ஒரு மாற்றமாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு பதிலாக கனடா இடம் பெற்றது.

இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்து இருந்தன.

இலங்கை, கனடா டெஸ்ட் அந்தஸ்து இன்றி தகுதி பெற்ற அணிகளாகும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறிது. கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி இந்த முறை லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

அரைஇறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள்அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மைக் பிரியர்லி தலைமையிலான இங்கிலாந்தை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 99 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ், காலின்ஸ் கிங் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. 

பின்னர் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களம் இறங்கிய இங்கிலாந்து, தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மைக் பிரியர்லி, ஜெப் பாய்காட் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்த போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 

இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பையை தக்கவைத்து கொண்டதுடன், உலக கிரிக்கெட் அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது. மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Exit mobile version