மேற்குவங்கம், அசாமில் இன்று 2ம் கட்ட தேர்தல்!

மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அசாமில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 171 வேட்பாளர்களும், அசாமில் 345 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நட்சத்திர தொகுதியான நந்திகிராமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதிக்குள் வரும் வாகனங்களை துணை ராணுவப் படை வீரர்கள் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர். மேலும், தொகுதி முழுவதும் கூடுதலாக துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version