ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 78 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து தொடங்கிய 3 ஆம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் பொறுப்பாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி 94 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்களின் கணிசமான பங்களிப்பால் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது.