வங்கதேசத்திற்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
முஹமதுல்லா தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிடன் தாஸ் 29 ரன்களிலும், முகம்மது நையிம் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறது நேரம் தாக்குப்பிடித்த சவும்யா சர்கார் 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் தனது 100 வது டி20 போட்டியில் விளையாடிய ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 15.4 ஓவர்களில் இந்திய அணி 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.