இந்தியாவில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் போது நடந்த 2ஜி ஊழல் நாட்டையே உலுக்கியது. அந்த 2ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது நீதிபதி மாற்றப்பட்டு உள்ளார். ஏன் இந்த மாற்றம்? 2ஜி வழக்கில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?
காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது, 2 ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, அன்றைய அரசின் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ திறம்பட செயல்படாத காரணத்தால் 2017-ம் ஆண்டு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாத சிபிஐ-அமைப்பை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டுக்குச் சென்றது. 2019 மார்ச்சில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி அதுவரை பதில் மனுத்தாக்கல் செய்யாதவர்கள், தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் அவகாசங்களை வழங்கி வழக்கை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
2ஜி வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவாளிகளை விடுவித்தது மட்டுமின்றி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறனை விடுவித்துத் தீர்ப்பளித்தவரும் இதே ஓ.பி.சைனியே ஆவர். இவர் சமீபத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் முன்ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில் நீதிபதி ஓ.பி.சைனியின் பதவிக்காலம் அடுத்த மாதத்தோடு நிறைவடைய உள்ளதால், இன்று 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. 2ஜி வழக்கை இனி விசாரிக்க உள்ள நீதிபதி குஹார் ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்துவருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2ஜி ஊழல் நடந்த காலகட்டத்தில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் சிதம்பரம், எனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அவருக்குத் தெரியாமல் நடந்திருக்காது – என்று ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. சில ஆயிரம் கோடிகள் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழலில் ப.சிதம்பரத்திற்குத் தொடர்பு உள்ள போது, ஒரு லட்சம் கோடிக்கும் மேல் பண மதிப்பு உடைய 2ஜி வழக்கில் அவரது பங்கு கண்டிப்பாக இருக்கும் – என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில், இந்த அடிப்படையில் தொடர்புடைய இரண்டு வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிப்பதால் 2ஜி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் போன்றவர்களின் பங்கு என்ன என்பது கூட தெரிய வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.