தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 456 கோடியே 76 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இதுதவிர, மாவட்ட மற்றும் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் 417 அமர்வுகள் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 423 அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில், நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணைக்கு வராத வழக்குகள் என 27 ஆயிரத்து 771 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதில், 456 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 878 ரூபாய் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.