ஒபிசி பிரிவுக்கு 27% ஒதுக்கீடு-அதிமுகவின் வெற்றி

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, அண்ணா திமுகவின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிக அளவு இடங்களைப் பெற வழி வகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளனர்.

17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, இதற்காக ஒரு குரல் கூட எழுப்பாத திமுக, இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக, வாய்மூடி மவுனியாக இருந்த திமுக,

சுயநலத்திற்காக பொதுநலத்தை தாரை வார்த்த திமுக, அதிமுக-வின் நீண்ட நாள் போராட்டத்தால் கிடைத்த வெற்றியை தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா 30 ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மத்திய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவச் சேர்க்கை ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும்,

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யவும் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version