உத்தரபிரதேச மாநிலத்தில் இடியுடன் கூடிய புழுதிப் புயலில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேர் காயமடைந்தனர்.
புழுதிப் புயலால் உத்தரபிரதேசத்தின் மெயின்பூரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 41 பேர் காயமடைந்தனர். பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புழுதிப்புயலுக்கு எட்டா, காஸ்கன்ஞ் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்தனர். பாருக்காபாத், பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் தலா இரண்டுபேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் புழுதிப்புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.