செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒருகோடியே 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடப்பா மாவட்டம், காஜிபேட்டை அருகே நாகசாமி பள்ளி வனப்பகுதியில், ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கடத்தி செல்ல இருப்பதாக ஆந்திர மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற கடப்பா மாவட்ட வனத்துறை அதிகாரிகள், செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேரையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்தனர். செம்மரம் ஏற்றிச் செல்ல இருந்த லாரியை பிடித்ததுடன், 4 கார்கள், ஒருகோடியே 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

 இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கடப்பா மாவட்ட வன அலுவலர் குருபிரபாகர், தமிழகத்தைச் சேர்ந்த 25 பேருடன், பொதட்டூர் ஒய்.எம்.ஆர். காலனியை சேர்ந்த மல்லேஷ், கடப்பா மாவட்டம் மைதுக்கூரை  சேர்ந்த சுப்பாராயுடு ஆகியோரைக் கைது செய்துள்ளதாகவும், செம்மரக் கடத்தலில் சர்வதேச கடத்தல்காரன் அப்பாஷ் மற்றும் பொதட்டூரை  சேர்ந்த மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version