24 கேள்விகள் தவறு : டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்ட நிலையில், இதில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

இதையடுத்து தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தேர்வாளர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த டிஎன்பிஎஸ்சி, கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பார்த்திபன் முன்பு வந்தபோது, தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். இது தொடர்பாக ஜூன் 17ம் தேதி பதில்மனு தாக்கல் செய்யவும் டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version