விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உரையாறிய முதலமைச்சர், ஸ்டாலின் குடும்பத்தினர் ஊர் ஊராக சென்று அரசு மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து உண்மைக்கு புறம்பாக கனிமொழி பேசி வருவதாக கூறிய முதலமைச்சர், மகளிருக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் முதலமைச்சர் குறைதீர் முகாம்கள் மூலம் 5 லட்சம் மனுக்களுக்கு மேல் அதிமுக அரசு தீர்வு கண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகள், உழைக்கும் மக்களுக்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு என்றும் முதலமைச்சர் கூறினார். விவசாயிகள், விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.