கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு காரணங்களால், 19 கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களை இழந்த துயரத்தில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேட்டறிந்தார். மேலும், நாளை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கும் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, கல்புர்கி நகரில் கேபிஎன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.