பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோடை விடுமுறைக்குப் பின்னர், சென்னையிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் மாநகரின் முக்கிய சாலைகளில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லக்கூடிய பேருந்தின் மேற்கூரையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேனர்களுடன் நின்று கொண்டு சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதேபோன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் 21 எண்கொண்ட பேருந்தில், நியூ கல்லூரி மாணவர்கள் பேருந்து கூரையின் மீது ஏறி ஆபத்தான முறையில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொலி வெளியானதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதேபோல் நியூ ஆவடி சாலையில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், அயனாவரத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 7 மாணவர்கள் என மொத்தம் 24 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பேருந்து நிலைய வளாகங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Exit mobile version