போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2006ம் ஆண்டில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் எனக்கூறி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சொராபுதீனின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதுவும் போலியாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த என்கவுண்டரில் குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2010ல் அவர் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த என்கவுண்டர் வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் அமித்ஷா, கட்டாரியா உள்ளிட்ட 16 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 22 பேர் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.