ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள், வேலையிழந்து, அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி தவித்து வந்தனர். மேலும், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் தங்களது சொந்த ஊருக்கு கால்நடையாக புறப்பட்டுச் சென்றனர். டெல்லி – உத்தர பிரதேச எல்லையான காசியாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்நிலையில், கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆந்திர மாநிலத்தில் 5 பேரும், மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 12 பேரும், மத்திய பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது.