தமிழகத்தில், மேலும் 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்து 449 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 115 பேரில், ஆயிரத்து 279 பேர் ஆண்கள், 836 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 25 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆயிரத்து 630 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 55 புள்ளி 60 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 41 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 509 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், அதிகபட்சமாக ஆயிரத்து 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 327ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் புதிதாக 103 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 86 பேரும், மதுரையில் 58 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.