விருதுநகர் மாவட்டத்தில், முறையான அனுமதியின்றி செயல்படும் 21 மினரல் வாட்டர் நிறுவனங்கள், நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அழகாபுரியை சேர்ந்த, விடியல் வீர பெருமாள் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சிவகாசி, ஆனைக் குட்டம், திருச்சுழி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட 21 இடங்களில் மினரல் வாட்டர் நிறுவனம் என்ற பெயரில், அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். மேலும் சில நிறுவனங்கள், அனுமதி பெற்றதை விட கூடுதலாக, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 21 தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களும் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.