2019-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், தமிழகத்தில் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல்: அமைச்சர் எம்.சி.சம்பத்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழக அரசின் தொழில் துறை சாதனைகள் குறை கூறும் ஸ்டாலினின் வெற்றுக் கூச்சலுக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியடைந்ததன் மூலம், தமிழகத்தில் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதில் 4 நிறுவனங்கள் முழுமையாக வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதையும் அறிக்கையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெளிவுபடுத்தி உள்ளார்.

திமுக ஆட்சி, தொழில் நிறுவனங்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியதோடு, தமிழ்நாட்டையே இருளில் மூழ்கடித்ததாக அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின் படி, திமுக ஆட்சி காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 25 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக இருந்ததாகவும், ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, அந்நிய நேரடி முதலீடு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதை அமைச்சர் எம்.சி.சம்பத் சுட்டிக்காட்டி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதில், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் அமைச்சர் எம்.சி. சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு அறிக்கையின் படி, தொழிற்சாலை வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், எண்ணிக்கையின் அடிப்படையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை விட இரு மடங்கு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ஸ்டாலின் போன்றோர்கள் வெற்று கூச்சலை தான் போட வேண்டும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version