2018 டாப்-10 படங்கள்

வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி உள்ளடக்கத்தின் அடிப்படையிலும், கலையம்சத்துடன் அணுகிய விதத்திலும் திரைப்படங்களை நாம் பார்க்க வேண்டும். அந்தவகையில் 2018-ம் ஆண்டின் டாப் டென் படங்கள் குறித்த பட்டியலை இப்போது பார்ப்போம்…

பரியேறும் பெருமாள்

ஆணவக் கொலைகள் இன்றளவும் நடக்கக்கூடிய காலகட்டத்தில் சாதிய வன்மங்களை அப்பட்டமாக துகிலுரித்துக் காட்டிய விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது பரியேறும் பெருமாள். ஒழிக்கப்பட வேண்டிய இரட்டைக் குவளை மனநிலையை பகிரங்கபடுத்திய இயக்குனர் மாரி செல்வராஜின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

மேற்குத் தொடர்ச்சி மலை

மண்சார்ந்த படங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று தெரிந்தும் சமரசங்களுக்கு இடமளிக்காது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வாழ்வியல் படைப்பாக திகழ்கிறது. இயக்குனர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ஆகியோரின் சினிமா மீதான மரியாதைக்கு ஒரு சல்யூட்.

வடசென்னை

வடசென்னையின் அசல் முகத்தை இந்த அளவு ரத்தமும், சதையுமாக வேறு எந்த படமும் காட்டியதில்லை என்று சொல்லுமளவுக்கு கலைரீதியான படைப்பில் விஞ்சி நிற்கிறது வடசென்னை. திரைமொழியும் – நடிகர்களின் பங்களிப்பும் சமவிகிதத்தில் சேர்ந்த விதத்தில் வடசென்னை ஒரு காலகட்டத்தின் செல்லுலாயிட் பதிவு.

டிக் டிக் டிக்

தமிழில் அறிவியல்படங்கள் குறைவு, அதிலும் விண்வெளி சார்ந்த படங்கள் இல்லவே இல்லை என்ற குறையை போக்கும் விதமாக வந்த படம் டிக் டிக் டிக். முடிந்தவரை நம்பக்கூடிய விதத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியதும் – அதற்கான மெனக்கெடலும் இனிவருங்காலத்தில் அட்டகாச விண்வெளி படங்களின் வருகைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது டிக் டிக் டிக்.

96

காதலின் மென்மையான பக்கங்களை தழுவும் தென்றலென வழங்கிய விதத்தில் 96 படம் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. பாடல்கள் – நடிப்பு – திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் முழுமையான படைப்பாக வந்ததால் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது 96.

ராட்சசன்

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே த்ரில்லர் படங்கள் சொல்லும்படி வந்துள்ளன. அந்தவகையில் இருக்கையின் நுனிவரை ரசிகர்களை கட்டிப்போட வைத்தது ராட்சசன். அடுத்து என்ன நடக்கும், யார் வில்லன் என்பதை கடைசிநொடி வரை தேக்கி வைத்து வெளிப்படுத்திய விதத்தில் எல்லோரையும் கவர்ந்துள்ளான் இந்த ராட்சசன்.

நடிகையர் திலகம்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நடிகையர் திலகம் திரைப்படம் தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் வெளியானதோடு வெற்றியும் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்குள் இருந்த அபார நடிகையையும் அடையாளம் காட்டியது நடிகையர் திலகம். எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கும், எப்படி வாழக்கூடாது என்பதற்கும் பாடமாக அமைந்த சாவித்ரியின் வாழ்க்கையை படமாக எடுத்து பெருமை தேடிக்கொண்டது திரையுலகம்.

கடைக்குட்டி சிங்கம்

விவசாயம் என்ற சொல்லே அந்நியமாகி விட்ட காலத்தில், அதனைப் பற்றி சுவாரஸ்யமாக எடுத்ததோடு கூட்டுக் குடும்பம் என்பதன் அவசியத்தையும் ஜனரஞ்சகமாக சொன்ன விதத்தில் முதலிடத்தில் நிற்கிறது கடைக்குட்டி சிங்கம். பல காலத்திற்கு பிறகு திரையரங்குகளில் குடும்பம், குடும்பமாக மக்களை வரவழைத்ததற்காகவே கடைக்குட்டி சிங்கத்திற்கு பூங்கொத்தை ஒன்றை வழங்கலாம்.

ஒரு குப்பைக் கதை

திருமண பந்தத்திற்கு பிறகான உறவு எப்படி குடும்பத்தை சிதைக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்த்தது ஒரு குப்பைக் கதை. மனிதர்களின் அக அழுக்கை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை ஒரு துப்புரவு தொழிலாளியின் வாழ்க்கையோடு கலந்து கொடுத்த விதத்தில் கவனம் ஈர்த்தது குப்பைக் கதை.

2.0

550 கோடி ரூபாய் என்ற மெகா பட்ஜெட்டோடு எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக புதிய நடிகர்களோடு களமிறங்கியது 2.0. அதீதமான கிராபிக்ஸ், நம்ப முடியாத காட்சிகள் போன்றவற்றால் சற்று தடுமாறினாலும் புதிய முயற்சி என்ற வகையில் அதற்குண்டான வரவேற்பையும் பெறத் தவறவில்லை 2.0. தமிழைக் காட்டிலும் பிற மொழிகளில் வசூலில் சாதனை படைத்தது இந்த 2.0

Exit mobile version