காவிரி மேலாண்மை ஆணையம் 16.2.18
காவிரி நதி நீர் பங்கீட்டின் மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசிற்குஉத்தரவிட்டது. தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
மரணம் அடிப்படை உரிமை 10.3.18
கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருவர் கவுரவமாக உயிரிழப்பதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான் என்றும், உயிர் சாசனம் மற்றும் ‘பாசிவ் யூதனேசியா’’ எனப்படும் கருணைக் கொலை சட்டப்படி செல்லும் என்றும், குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் மற்றும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டவர்கள் கவுரவமாக தங்கள் உயிரை முடித்துக் கொள்வதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையில் அடங்கும் என கடந்த மார்ச் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சமூக பஞ்சாயத்துகள் தலையிடத் தடை 28.3.18
மதம், சாதி ரீதியில் சீர்திருத்தத் திருமணம் செய்யும் வயது வந்த ஆடவர், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திருமணத்தில் உறவினர்களோ அல்லது 3ஆவது தரப்பினரோ தலையிடவும், மிரட்டல் விடுக்கவும், துன்புறுத்தவும் முடியாது என நீதிமன்றம் கூறியது. இந்த விவகாரத்தில், சமூக பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத அமைப்புகள் தலையிடுவதற்கு தடை விதித்தது.
திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழலாம் 7.5.18
வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் உரிமை உள்ளது என்றும் திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் குற்றமாகக் கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல 7.9.18
ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதும் இந்திய தண்டணைச் சட்டத்தின் 377ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இந்த பிரிவு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது என்றும் அனைவரும் சமமாக வாழ்வது, கண்ணியத்துடன் வாழ்வது தொடர்பான உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறியது.
தகாதஉறவு குற்றமல்ல 27.9.18
யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் தகாத உறவை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல என்பதோடு ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்றும் கூறியது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆதார் செல்லும் 27.9.18
மத்திய அரசின் மிக முக்கியமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் கட்டாயமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு, வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தீர்ப்பு வழங்கியது.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி 28.9.18
மாதவிடாயைக் காரணம் காட்டி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி மறுக்கப்படுவது அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியது. எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 31.10.18
தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களிலும் தலா 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காற்று மாசு, ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய, திடக்கழிவு பிரச்சினையுள்ள பட்டாசுகளை தடை செய்யவும், இணையதளங்கள் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
ரஃபேல்- முறைகேடு இல்லை 14.12.18
பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் ரக அதிநவீனப் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.