கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதான அணைகளான கே.ஆர்.பி அணை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலம் தென்பெண்ணையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு வரக்கூடிய உபரி நீர் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.பி அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் உள்ள தரைப்பாலத்துக்கு மேல் வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடரும் நீர் வரத்து அதிகரிப்பால், அணையிலிருந்து ஆயிரத்து 368 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றத்தால், தென்பெண்ணை ஆறு பாயும் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version