வேலூர் தேர்தல் பணிகளில் 20 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்: மாவட்ட ஆட்சியர்

பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வெளி மாவட்ட அரசியல் பிரமுகர்கள், நிர்வாகிகள் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம், ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 59 வாக்குச்சாவடிகளில் சுழற்சி முயற்சியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்த உள்ளதாக அவர் கூறினார். இதுவரை விதிமீறல் காரணமாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 2 கோடியே 77 லட்சத்து ஆயிரத்து 820 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 600 துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறிய அவர், வாக்கு எண்ணும் வரை 19 ஆயிரத்து 932 பேர் தேர்தல் பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திங்கட்கிழமை மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது என்றும், தேர்தல் நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version