தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்து 20 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இருசக்கர வாகனங்கள் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதற்கு போக்குவரத்து துறையின் செயல்பாடே காரணம் என கூறினார். சுகாதாரத்துறை சார்பில் விபத்து நிகழும் இடத்திற்கு உடனடியாக சென்று உதவி வழங்கப்படுவதாக கூறிய அவர், விபத்துக்கான சிகிச்சை மையங்களுக்கு 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.