மும்பையில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலி

மும்பையில் பெய்து வரும் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை மாவட்டம் பிம்பரிப்பாடா பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேபோல், புனே மாவட்டம் அம்பேகான் நகரிலுள்ள சிங்காத் கல்லூரியின் சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கனமழை தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது.

மும்பை, தானே, பால்கர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பையில் இன்னும் 3 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Exit mobile version