6 உயிர்களைக் காப்பாற்றிய 2 வயது பாலகன்

ஆரோக்கியமான உடலைக்கொண்ட குடும்பம் தான் உண்மையில் செல்வந்தக் குடும்பம்.  அதுபோக எந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு நோயில்லையோ அதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் என்பதெல்லாம் மனிதன் மறுக்கமுடியாத உண்மைகள்.

ஆம். சிக்கல்கள் ஆயிரம் சூழ்ந்திருக்கும் இந்த மனித வாழ்வில் முதல்  சிக்கல் உயிரைக் காப்பதும் , உடல்நலத்தோடிருப்பதும் தான். அப்படி, தன் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வந்து , பின் 6 உயிர்களைக் காப்பாற்றிய ஒரு குடும்பத்தின்  கதைதான் இது.

இந்த தசாப்தத்தின் மிக இளைய உடலுறுப்பு தானம் செய்த நபர் யார் என்றால் அது இவான் பிரபு தான். வயது இரண்டு.

புனேவைச் சேர்ந்த குடும்பம் அவர்கள். இரண்டு வயது மகனுக்கு இருந்த மூளைக்கட்டியை சரி செய்வதற்காக மும்பையில் அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள்.

மூளைக்கட்டி குறித்த பெரிய விழிப்புணர்வு ஏதும் இல்லாதவர்களாயினும், கடந்த இரண்டு மாதங்களாக இது பற்றி பலரிடமும் கேட்டும் பேசியும் தெரிந்துவைத்திருந்தார் ஐடி ஊழியரான அந்த தந்தை.

ஃபிப்ரவரி 4ம் தேதி பாம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவான் பிரபுவுக்கு பிப்ரவரி 5 ம்தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடியும் வரை என்ன நடக்குமோ என்று பதறிகொண்டிருந்த பெற்றோர்க்கு, நல்ல செய்தி காதுக்கு வந்தது.

இவான் மீண்டும் சுயநினைவு பெற்றான். ஆனால் , விதி வலியது. குழந்தை இவான் பிரபு கொஞ்ச நேரத்தில் இறந்து போகிறான். துடித்துப்போனார் தந்தை. துக்கம் தாளாமல் மூர்ச்சையானாள் தாய். ஆனால் அடுத்த நகர்வு அதி அற்புதம்.

தன்மகன் இறந்து விட்டான் என்ற செய்தி வந்ததும் அந்த தம்பதி எடுத்த இந்த முடிவு,  இவன் உடலுறுப்புகளை தானம் செய்து விடலாம் என்பதுதான். பக்குவத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த தம்பதியின் இந்த முடிவால் அந்த நாளில் 6 உயிர்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்டது.

மூளைச்சாவு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் முடிந்திருக்கிறது இந்த ஒட்டுமொத்தஅறுவை சிகிச்சையும். இவன் தானத்தால் நலம்பெற்ற உயிர்கள் இந்தியாவின் பல்வேறு நகரமெங்கும் பரவிக்கிடக்கின்றன.

 

4 வயது சிறுவன் ஒருவனின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இவனது கல்லீரல் தானேவிலுள்ள ஜுபிடர் மருத்துவமனைக்கும் .

இதயமாற்று அறுவை சிகிசைக்காக வெகு விரைவாக சென்னை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கும்,

சிறுநீரகங்கள் இரண்டில் ஒன்று லீலாவதி மருத்துவமனையில் ஒருவருக்கும் ,

மற்றொன்று குளோபல் மருத்துவமனையில் ஒருவருக்கும் பொருத்தப்பட்டது.

மேலும் கண்ணின் கார்னியாக்கள் கண் வங்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

 

ஒரு இடத்தில் ஒரு குடும்பத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவன் இப்போது இந்தியா எங்கும் நிறைந்துவிட்டான். அவன் ஆன்மா நிறைவு பெறட்டும்.

குழந்தையை இழந்த சோகத்தில் இருக்கும் அவன் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த வருத்தங்களையும், இவனைப் பெற்றதால் அந்தக் குடும்பத்திற்கு கிடைத்த பெருமைக்கு வாழ்த்துகளும், சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்த அந்த தம்பதிகளுக்கு பாராட்டும்.

Exit mobile version