சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்களை அனுமதித்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் 50 வயதுக்கும் குறைவான பெண்களை அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் பெண்களை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி சபரிமலையில் போராட்டம் வெடித்தது.
இதனால் அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 3 மாதங்களாக தீர்ப்பினை அமல்படுத்த முடியாத நிலையில் நேற்று அதிகாலை திடீரென கோழிக்கோடை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா ஆகிய இரண்டு பெண்களை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர்.
நேற்று முன் தினம் கேரளா முழுவதும் ”வனிதா மதில்”, என்ற பெயரில் 50 லட்சம் பெண்கள் 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு கைகோர்த்து நின்றனர். ஆளும் கட்சி ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டம் முடிவடைந்த நிலையில் திடீரென இரண்டு பெண்களை அரசு கோவிலுக்குள் அனுமதித்து உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்ம சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசு பேருந்துகளும் எல்லையில் நிறுத்தம்
சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கேரளாவிலிருந்து வரும் அரசு பேருந்துகளை பாஜக மற்றும் ஐயப்ப பக்தர்கள் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளையில் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா செல்லும் தமிழக அரசு பேருந்துகளும் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.