2 ஆயிரம் ரூபாய் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக ஊரக பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேருக்கும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேருக்கும், 2000 ரூபாய் சிறப்பு நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில், மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிறப்பு நிதியுதவினை வழங்குவதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போன்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் உத்தரவு நகலும் நீதிபதிகள் முன்னிலையில்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தினேஷ் பாபு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version