ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 2பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், ஆன்லைனில் முன்பணம் கட்டினால் லட்சக்கணக்கில் லாபம் வரும் என்று மக்களை ஏமாற்றிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆப்பேக்ஸ் என்ற யுடியூப் சேனலில் ஆன்ட்ராய்டு செல்போனில் நியூஸ்  பார்த்தாலே வருமானம் என்ற பெயரில் நோட்டீஸ் பேஸ்புக், வாட்ஸ் அப் குரூப், இன்ஸ்டாகிராமில் உலா வந்தன. அதில், முழு நேரம், பகுதி நேரம் சம்பாதிக்க வாய்ப்பு, ஆன்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் இந்த வாய்ப்பு என்றும், ஆட்களை யாரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், யுடியூப் சேனலில் நியூஸ் பார்ப்பதற்கு மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டயமண்ட் போன்ற திட்டங்கள் இருப்பதாகவும், மைக்ரோ திட்டத்தில் சேர்வதற்கு ரூ.1,440 முதல் 46080 ரூபாய் வரையிலான பல திட்டங்களில் பணம் கட்டி சேர்ந்தால், மாதாமாதம் 272 ரூபாய் முதல் 8704 ரூபாய் வரை 20 மாதங்களுக்கு அதிகபட்சமாக 1,74,080 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. இது குறித்து  விசாரணை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார், அவரது நண்பர் ஈரோடு அடுத்த கனகபுரம் தேவஸ்தானபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன் என்பது தெரியவந்தது.

இவர்கள் பி.இ பட்டதாரிகள். இவர்கள் இருவரும் மக்களை யுடியூப் சேனலில் சேர வைக்க முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என மோசடியாக விளம்பரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மக்களை ஏமாற்றி மோசடி செய்ய முயன்றதாக ஈரோடு டவுன் கிரைம் போலீசார் இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Exit mobile version