சென்னையில் 7 மாத குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி, 7 மாத குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்றார். சினிமாவில் நடிக்க வைப்பதற்காக சில பரிசோதனைகளை செய்ய வேண்டும் எனக் கூறி, குழந்தையின் பெற்றோரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமர வைத்துவிட்டு குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அந்தப் பெண் குழந்தையோடு செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த எழும்பூர் மருத்துவமனையின் செவிலியர்கள் எழும்பூர் காவல்நிலையத்தில் அந்தப் பெண்ணை குழந்தையோடு ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் ரேவதி என்பதும், அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்த ரேவதியின் தாயார் ஜெயலட்சுமியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மீட்கப்பட்ட 7 மாத குழந்தையை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.