சென்னையில் ஏ.டி.எம்.ல் பணம் நிரப்ப வந்தவர்களை தாக்கி 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் 2 நைஜீரிய நாட்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கிகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஏடிஎம்-களில் நிரப்பும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இருவர், கடந்த பிப்.7ந் தேதி மாலை, ஒரு வேனில் 35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வடபழனி, விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பியுள்ளனர். பின்னர் 14 லட்சத்துடன் அய்யப்பன்தாங்கல் அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் ஏடிஎம்மில், 4 லட்சத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் அந்த ஏடிஎம்மிற்குள் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் போல திடீரென நுழைந்து, பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தவர்களிடமிருந்த கையில் வைத்திருந்த பணம் 10 லட்சத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுக்கவே, அவர்களை சிறிய கோடாரியால் தாக்கிவிட்டு, 10 லட்சம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே தயாராக பைக்கில் இருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்று விட்டனர்.
சென்னை மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவத்தில், போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள், கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதி செல்போன் டவரில் கொள்ளைச்சம்பவம் நடந்த குறிப்பிட்ட நேரத்தில் பதிவான அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்த போது தான், கொள்ளையர்கள் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் போலீசாரிடம் சிக்கின.
அவைகளை வைத்து அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நைஜீரிய நாட்டை சேர்ந்த அக்யோமாயே, ஆமு, என்ற 2 வாலிபர்களையும், இவர்களுக்கு உதவியதாக கல்லூரி மாணவி ஒருவரையும் கைது செய்தனர். மேலும் இதில் மூளையாக செயல்பட்ட மற்றொரு நைஜீரியரைத் தேடி தனிப்படை போலீசார் மைசூர் மற்றும் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.