கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு 2 புதிய அறிகுறிகள்!

இதுவரை தலைவலி, காய்ச்சல், சளி போன்ற புளூ காய்ச்சலின் அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வுகள் கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள் இருக்கக் கூடும் என கூறுகின்றன. வாசனையை சரியான நுகர்ந்து இனம்காண முடியாத நிலை, மற்றும் சுவையை சரியாக உணர முடியாத நிலை – ஆகியவைதான் அந்த அறிகுறிகள். சீனா, இத்தாலி, தென்கொரியா நாடுகளில் உள்ள 25% கொரோனா நோயாளிகள் தங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்துள்ளதாகக் கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் 40 வயதுக்கு உட்பட்டவர்களைத் தாக்கும் போது, அவர்களில் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட பலருக்கு வைரஸ் தாக்கம் உள்ளது தெரிவதே இல்லை. இவர்கள்தான் பொது இடங்களில் ஆரோக்கியமாக இயங்கி வைரஸ்சை பரப்புகிறார்கள். இவர்களை ‘வைரஸ் கேரியர்’ என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனாவின் இந்தப் புதிய 2 அறிகுறிகள் வைரஸ் கேரியர்களாக உள்ள இளவயதினரில் 30% பேரால் உணரப்பட்டதாக தென் கொரியாவில் இருந்துவரும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலருக்கு கொரோனாவின் பிற அறிகுறிகள் இல்லாத நிலையிலும் இந்த 2 அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதனையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின், அபாயமான நோய்கள் ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், கடந்த திங்கள்கிழமையன்று, வாசம் உணர்தலில் ஏற்படும் குறைப்பாட்டோடு கொரோனா வைரஸ்சுக்கு என்ன தொடர்பு என்று ஆராய்ந்து வருகிறோம் – என்று கூறி உள்ளார். இதனால் இது குறித்த முழுமையான விளக்கம் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, வாசனை உணர்தல், சுவை உணர்தல் ஆகியற்றில் திடீர் குறைபாடு ஏற்பட்டால் கூட அவற்றை மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது – என்று பல்வேறு நாடுகளில் மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தத் தொடங்கி உள்ளனர்.

Exit mobile version