கேரளாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட, 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 கட்டடங்கள் நேற்று, வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 கட்டடங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
கேரள மாநிலம், கொச்சியில், உள்ளது மரடு நகராட்சி. இங்கு 343 வீடுகள் கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டங்கள், கடற்கரைக்கு மிக அருகில், விதிகளை மீறிக் கட்டப்பட்டு இருப்பதால், அவற்றை இடிக்க வேண்டும் என கேரள அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கட்டட நிறுவனங்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.
வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாநில அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கேரள அரசின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கொச்சி காவல்துறையின் மேற்பார்வையில், நேற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நவீன முறையில் வெடி வைக்கப்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அடுக்குமாடி கட்டடம் தகர்க்கப்பட்டது. நான்கு கட்டடங்களில் இரண்டு கட்டடம் நேற்று தகர்க்கப்பட்டது. மீதமுள்ள கட்டிடங்கள் இன்று தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில், வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.
பாதுகாப்பு கருதி, கட்டிடத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.