லண்டனில் முதலமைச்சர் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

லண்டனில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

வெளிநாட்டு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக, லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, லண்டன் நேரப்படி காலை 9 மணி அளவில், இங்கிலாந்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர் லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, London School of Hygiene and Tropical Medicine ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற முதலமைச்சர், மையத்தை பார்வையிட்டதுடன், மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் கையாளும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் இங்கிலாந்தில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்நோய்களை கட்டுப்படுத்த, அந்த ஆராய்ச்சி மைய நிறுவனத்துடன் நோக்க அறிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் இதர பிரிவுகளை முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், தாய், சேய் நல மருத்துவத்தில் நவீன மருத்துவ முறைகளை தமிழகத்தில் மேம்படுத்தவும், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, கிங்ஸ் மருத்துவமனை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் மற்றும் குழுவினருக்கு காணொலி மூலம் விளக்கப்பட்டது.

தமிழகத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். லண்டன் கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டபின், கிங்ஸ் கல்லூரி அரங்கில், மருத்துவமனை மருத்துவர்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைக்க, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

Exit mobile version