தமிழகத்தில் 19,717 குடும்பங்கள் கோவில் நிலங்களில் வசிக்கின்றனர்- தமிழக அரசு

தமிழகத்திலுள்ள கோவில் நிலங்களில், 600 ஏக்கர் மட்டும், 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக வருவாய் துறை சார்பில், கூடுதல் பதில் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்து 717 குடும்பங்கள், கோவில் நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, மொத்தம் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்களை மட்டுமே, ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பின்னரே, பட்டா வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவில் நிலத்தை எடுப்பதற்காக வழங்கப்படும் இழப்பீடு மூலம் கிடைக்கும் வருவாய், கோயிலின் திருவிழா மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version