தனுஷ்கோடி- காலம் சிதைத்த கடல்நிலம்

 வந்துகாத்திருந்து வங்காள விரிகுடா இந்துமாக் கடலோடு இனைகிற முனை. இருகடலும் சத்தமின்றி சங்கமிக்கும் இந்த இடம் இப்போது சத்தமின்றி செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மிகப்பெரிய வியாபாரத்தலைநகரமாகவும், இருநாட்டு இணைப்பு முனையமாகவும் இருந்தது என்றால் நம்பத்தான் முடிவதில்லை.

ஒரே ராத்திரியில் எல்லாம் மாறிடாது என்பார்கள் பெரியவர்கள். ஆனால் இங்கே அது பொய்யாய்போனது. ஒரே ராத்திரியில் எல்லாம் தலைகீழானது. டிச,22 1964, உலகம் என்னாயிற்றெனச் சிந்திக்கும் முன்பே எல்லாம் முடிந்து போயிருந்தது அந்த ஒரே இரவில்.

சுமார் 1800 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் என்று அறிக்கைகள் சொல்லின. ஆனால் அதற்கும் மேல் என்று அழுகைகள் சொல்லின.

அப்போதுதான் ரயில்வே துறைக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருந்தார் சர் ஹென்றி கிம்பர். சென்னை முதல் கொழும்பு க்கு பயணம் ஏற்பாடு செய்ய திட்டம் ஒன்று போட்டார். கர்சான். தி எஞ்சின், ஹார்ட்டின்ச், பொட் மெயில் ரயில், பாம்பன் பாலம் என அனைத்தும் இந்த திட்டதின் பகுதிகள்தான்.

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து, தபால் முனையம், ரயில்வே முனையம், பன்னாட்டு ஏற்றுமதி இறக்குமதி முனையம் என படுபிஸியாக இருந்தது அன்றைய தனுஷ்கோடி நகரம்.

இன்று அது மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடம்.

ரயில்வேக்கும், படகுத்துறைக்கும் பொன்விழா ஆண்டு 1964. தெற்கு அந்தமான் பக்கம் உருவான டிசம்பர் 15 ல் உருவானது ஒரு புயல். பூமத்தியரேகைக்கு அவ்வளவு பக்கத்தில் இப்படி ஒரு புயல் உருவாவதும் வலுவடைவதும் பதட்டத்தை மேலும் வளர்த்தது. டிசம்பர் 22 வௌனியாவைக் கடந்து நேரடியாக தனுஷ்கோடிக்குள் நுழைந்தது. அதுவரை தாயாய் இருந்த கடல் அன்று தாண்டவமாடியது கடல். எழுந்து நிற்கும் ஆற்றை அருவியென்று கவிகட்டலாம். எழுந்து நிற்கும் கடலை என்ன சொல்வது.

ஒரு நொடியில் உடைந்தது தனுஷ்கோடியின் எதிர்காலம். அதற்குப் பிறகு தனுஷ்கோடி தன்னை இழந்தது சுமார் இரண்டு கிலோமீட்டர் ஊரை கடல் தின்று செரித்திருந்தது. எஞ்சியிருந்த சிலர் மட்டும் மணல்மேடுகளில் நின்று தப்பிக்கொண்டனர். தகவல் துண்டிக்கப்பட்டு , வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் வேகமாக நடந்து மண்டபம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தாயிழந்து, தாரமிழந்து, பிள்ளையிழந்து, வீடிழந்து அலை அழித்த ஊர்க்காரர் என்ற அடையாளம் மட்டும் மிஞ்ச கிடைத்த வேலை செய்து நாளோட்டினர். நடராஜபுரம் என்றொரு தனி கிராமமே புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்டது. உலக ஊடகங்கள் இதை பெரும் பேரழிவு என்றும், நூற்றாண்டின் கொடிய சிதைவு என்றும் வர்ணித்தன.

இப்போதும் இங்கு 300க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. வாழ்ந்த பூமியை விட்டு வேறெங்கும் போகமாட்டொம் என்று வைராக்கியத்தோடு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்கப்பெறாவிட்டாலும் இயற்கை வெளிச்சம், இயற்கை இருள், கடலலைச் சத்தம், காதோரம் உவர்ப்பு என காலம் கழிவதாக பெருமை பேசிக்கொள்கிறார்கள் தனுஷ்கோடி வாசிகள்.

பள்ளி ஒன்றும் இயங்கி வருவதால் குழந்தைகள் அடிப்படைக் கல்விபெறுவதில் சிக்கலில்லை. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மருத்துவ வசதியும் ஏற்படுத்தினால் மகிழ்ச்சி என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் குடிகள்.

ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த தொழில்நகரம், இன்று பார்வயற்றுக் கிடப்பது கொஞ்சம் மனவருத்தம்தான். கடலும் கடல் சார்ந்த வாழ்வும் என்றால் என்ன என்பதை தனுஷ்கோடியை விடச் சிறப்பாக எந்த நகரமும் உண்ர்த்திவிட முடியாது.

Exit mobile version