நாடாளுமன்றத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு நாள்- பிரதமர் மோடி மரியாதை

நாடாளுமன்ற வளாகத்தின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஒரு வாகனத்தில் வந்த லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் காவலர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். காவல் படையினர் திருப்பிச் சுட்டதில் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவாக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் படங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றத் தாக்குதலின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைவுகூர்ந்துள்ளார். அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், தீவிரவாதத் தாக்குதலில் இருந்து நாடாளுமன்றத்தைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும், அதை முற்றிலும் அழிக்கவும் உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version