18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று 3வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். 18 எம்.எல்.ஏக்களின் முறையீட்டு மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்துள்ளார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பினை வாசித்த நீதிபதி சத்திய நாராயணன், முன்பு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் வழங்கிய தீர்ப்புகளை சார்ந்திருக்காமல் தான் சுயமாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக கூறினார்.
அதன்படி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என கூறிய அவர், நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.
அதேசமயம் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தபோது அதில் தன்னால் தலையிட முடியாது என்று ஆளுநர் கூறியதை முந்தைய அமர்வில் குறிப்பிடவில்லை என சுட்டிக் காட்டிய நீதிபதி சத்திய நாராயணன்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்..
இதன் மூலம் ஏற்கனவே காலியாக இருக்கும் 2 தொகுதிகளுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது..