18 எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது – அரசியல் சாசனம் கூறும் ஆதாரம்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசியல் நிபுணர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று கூறி ஆளுநரிடம் கடிதம் வழங்கிய டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் கடந்த ஆண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அந்த 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இருவேறு தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பாக தகுதிநீக்க வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதி, தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவிட்டார். இதன்மூலம் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசூழ்நிலையில் அந்த 18 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா? அப்படி போட்டியிட்டால் சபாநாயகரின் தகுதிநீக்கத்திற்கு என்ன பொருள் இருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசியல் சாசனம் சொல்வது என்ன என்று இப்போது பார்ப்போம். மக்கள் பிரதிநிதிகளை தகுதிநீக்கம் செய்வதற்கான அரசியல் சாசன சட்டப்பிரிவு 191 -ல் வருகிறது. அதில் அரசியல் சாசனம் 191(இ)-ன் படி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதி ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களால் நடப்பு சட்டப்பேரவை காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் 1985-ம் ஆண்டு பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டு இந்த அரசியல் சாசன திருத்தத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. 1985-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்த சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்த 18 எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை அரசியல் சாசனம் 191(இ)-ன்படி இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிட முடியாது. வேறுகட்சியிலோ அல்லது வேறு சின்னத்திலோ கூட இவர்கள் போட்டியிட முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, அரசியல் சாசனம் 191(இ)ன் படி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பதும் ஆராயப்படும். அவ்வாறு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 36 அதன் உட்பிரிவு 2 இதனை உறுதி செய்கிறது.

இந்த தகவல் கிடைக்கப்பெற்றது முதல் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாம். சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் இழந்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதே என்று கலங்கி போயுள்ளனராம். டி.டி.வி தினகரனை நம்பி அரசியல் அநாதைகளாகி விட்டோமோ என்று நொந்து போயுள்ளனராம்.

 

Exit mobile version