கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக London School of Hygiene and Tropical Medicine என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில், சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் பிரச்சனை, உடற்பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா வைரசாலும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஐந்தில் ஒரு நபர் ஏதாவது ஒரு உடல் சார்ந்த பிரச்னையை கொண்டுள்ளதாகவும், அத்தகையவர்கள் வைரஸ் தொற்றால் எளிதில் பாதிப்படைவார்கள் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆய்வறிக்கை அறிவுறுத்தியுள்ளது.20 வயதிற்கு உட்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட 5% மட்டுமே வாய்ப்புள்ளதாகவும், ஆனால் 70 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் 2 பேர் வைரஸால் பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.இதனால், எதிர்வரும் நாட்களில் சுமார் 170 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 170 கோடி என்பது உலக மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
அதேபோல, 35 கோடி பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அந்த மருந்தை முதலில் யாருக்கு செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய தங்களின் ஆய்வு உதவும் என லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், உடல் சார்ந்த பாதிப்புகளை கொண்ட மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நாடுகளில் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிஜி தீவுகள், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அங்கு கொரோனா பாதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, HIV பரவல் அதிகம் உள்ள நாடுகள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது..