164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயிலில் பயணம் செய்தது மறைக்க முடியாத அனுபவம் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இ.ஐ.ஆர்.21 என்ற நீராவி ரயில் என்ஜின், கடந்த 1855ஆம் ஆண்டு 132 குதிரைத் திறனுடன் தயாரானது. 54 ஆண்டுகள் இந்திய ரயில்வேக்கு சேவையாற்றிய இந்த பழமையான நீராவி என்ஜின், 1909ஆம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் புதுப்பொலிவு பெற்றது. கடந்த ஆண்டு நீராவி என்ஜினுடன் ஒரு ரயில் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு வர்த்தக ரீதியில் இயக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த ஆண்டும், நீராவி என்ஜின் ஒரு ரயில் பெட்டியுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை இன்று இரண்டு முறை நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டது.