16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழ்நாட்டில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில், 5 ஆயிரத்து 137 கோடி ரூபாய் மதிப்பில், 16 தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5 ஆயிரத்து 137 கோடி ரூபாய் மதிப்பில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 6 ஆயிரத்து 555 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் இரண்டாயிரத்து 300 கோடி முதலீட்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வல்லம்-வடகால் தொழிற்பூங்காவில், Super auto Forge நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் 320 கோடி ரூபாய் முதலீட்டில் Airflow Equipments நிறுவனத்துடன் போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 250 கோடி ரூபாய் மதிப்பில், ATC Tires நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்துக்காகவும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் Visteon நிறுவனம் மோட்டார் வாகன மின் உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் Top anil marketing நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சேமியா உற்பத்தி செய்யவும், செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 750 கோடி ரூபாயில் Princeton நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கும், BPL – FTA Energies நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில் மின்னணு வாகனத்துக்கான பேட்டரி உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும், 150 கோடி ரூபாய் முதலீட்டில் Sri varu Motors நிறுவனத்தின் மின்சார பைக்குகள் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Cloud Enablers நிறுவனத்துடன் 35 கோடி ரூபாய் முதலீட்டிலும், அமெரிக்காவின் Tire 1 Network Solutions நிறுவனம், 25 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் திட்டத்தை செயல்படுத்தவும், Swire pay நிறுவனம் 23 கோடியில் Digital payment திட்டத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. Plethy நிறுவனம் 22 கோடி ரூபாய் முதலீட்டில் digital Health திட்டத்தையும், Bitwise Academy நிறுவனம் 21 கோடி ரூபாய் முதலீட்டில் E-Learing திட்டத்தை கோவையில் நிறுவுவதற்கும், ரேடஸ் டிஜிட்டல் நிறுவனம் 21 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டத்தை செயல்படுத்தவும், Continube நிறுவனம் 20 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டத்தை சென்னையில் நிறுவுவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Exit mobile version