நாடு முழுவதும் 15,97,433 மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதுகின்றனர்!

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், மூவாயிரத்து 842 தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வை, நாடு முழுவதும் மூவாயிரத்து 842 தேர்வு மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுத 2 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால், தேர்வர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்கள் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. சாதாரண வெப்பநிலையை விட, கூடுதலாக உள்ள தேர்வர்களுக்கு தனி அறையில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வர்கள் கிருமி நாசினி, குடிநீர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வரவும், முகக் கவசம் மற்றும் கையுறைகள் தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version