தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஆயிரத்து 550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த சில நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன் பாடு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 683 மருத்துவர்களில் ஆயிரத்து 550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார். மருத்துவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மற்ற மருத்துவர்கள், இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அந்த பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.