வள்ளலாரின் சத்திய ஞான சபையில் 151வது ஜோதி தரிசன விழா

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, தைப்பூச தினமான இன்றுகாலை 6 மணிக்கு கருப்புத்திரை, நீலத்திரை, சிவப்புத்திரை உள்ளிட்ட 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு இரண்டாவது முறையாகவும், ஒரு மணிக்கு மூன்றாவது முறையாகவும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பப்பட்டது.

Exit mobile version