ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பின்னர், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், ஆயிரத்து 503 பேர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9 பேருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.