உத்தரபிரதேசத்தில், ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமையை போன்று, கான்பூரில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் உள்ளது கஹோலியா கிராமம். இங்கு வசிக்கும் 15 வயது சிறுமி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
சிறுமி காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கஹோலியா கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் ஆடைகள் களைந்திருந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டு இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, காவல்துறையின் கேள்விகளுக்கு முன்னுக்கு முரணாக தகவல் அளித்த சிறுமியின் மாமாக்கள் இருவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டன. அப்போது நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தால், சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.